சென்னை மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் மகேஷ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி, பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து பணம் வசூலித்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கில் தி.மு.க. நிர்வாகியும் தமிழக தனியார் பள்ளிகள் சங்கத் தலைவருமான அரசகுமார் உள்ளிட்டோருடன் மகேஷும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் நடந்த விசாரணையில், அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தலைமறைவாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகுமார் சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்ததாகவும் கூறினார்.
மகேஷ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் (வழக்கறிஞர் ரிச்சர்ட் வில்சனுடன்) வாதாடியதில், முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, மூன்று வாகனங்களில் வந்த 40க்கும் மேற்பட்ட போலீசார் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்ததாக குற்றம்சாட்டினார். கைது நடவடிக்கைக்கு முன் காவல் துறை பின்பற்ற வேண்டிய நிலையான செயல்முறை நடைமுறைகளை நீதிமன்றம் வகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, அலுவலகத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் நீதிபதியிடம் காட்டினார்.
இதற்கு அரசு தரப்பில், மூத்த வழக்கறிஞரின் அலுவலகத்தின் வெளியே ஒன்றரை மணி நேரம் காத்திருந்து, மகேஷை வெளியே வரச் சொல்லி தான் கைது செய்ததாகவும் வாதிடப்பட்டது. வழக்கறிஞரின் அலுவலகத்தினுள் கைது செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டினார். அந்த உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்வதாக மகேஷ் தரப்பு தெரிவித்த நிலையில், வீடியோ ஆதாரங்களுடன் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தி, வழக்கு ரத்து மனு விசாரணையை நவம்பர் 10க்கு ஒத்திவைத்தார்.




