குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் ரூ.14,000 கோடிக்கு மேற்பட்ட மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, சில திட்டங்களைத் தொடங்கி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பிஎம்-கிசான் திட்டத்தின் 24வது தவணையாக 9 கோடியே 34 லட்சம் விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.18,680 கோடி தொகையை அவர் விடுவித்தார். இந்தத் திட்டம் கோடிக்கணக்கான சிறு விவசாயிகளின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் ஆமதாபாத் (சபர்மதி)–வாரணாசி விரைவு ரயிலும், மெஹ்சானா–பெச்சராஜி–சபர்மதி மெமு ரயில் சேவையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். குஜராத்தில் 50 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பிஎம்-கிசான் மூலம் பயனடைந்துள்ளதாகவும், பனஸ்கந்தாவில் லட்சக்கணக்கான விவசாயிகளின் கணக்குகளில் ரூ.50 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரை மேம்படுத்தும் நோக்கில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டதாகவும், மேலும் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார். குறைந்தபட்ச ஆதரவு விலை, உலகளாவிய நிச்சயமற்ற சூழலில் உர விலை உயர்வை சமாளிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இழப்பீடு உள்ளிட்ட அம்சங்களையும் அவர் உரையில் எடுத்துரைத்தார்.




