கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.

முத்துராமலிங்கத் தேவர் சுதந்திரப் போராட்ட காலத்தில் மட்டுமல்லாமல் சமூகப் பணிகளிலும் முழுமூச்சாக ஈடுபட்ட மகத்தான தேசியத் தலைவர் என அவர் கூறினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மனதில் இடம் பெற்றவர் என்றும், தமிழக மண்ணில் வாழ்நாள் முழுவதும் நாட்டின் எழுச்சிக்காக உழைத்தவர் என்றும் குறிப்பிட்டார்.

அரசியல் சமரசம் எதையும் ஏற்காமல் நேர்மை, தவம், கண்ணியம் ஆகியவற்றுடன் வாழ்ந்தவர்; அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வலுவான குரல் கொடுத்தவர் என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களுடன் நுழையும் போராட்டத்தில் அவர் முன்னின்று வெற்றி பெற்றதாகவும், தன் சொத்தில் பெரும் பகுதியை அவர்களுக்காக வழங்கியதாகவும் கூறினார்.

மேலும், தேவரின் பிறப்பும் இறப்பும் ஒரே நாளில் நிகழ்ந்தது அவரை “மகா சித்த புருஷர்” என காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் கண்டிப்பாக பசும்பொன் வருவதாக கூறியுள்ளதாகவும் துணை ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பு தினமலர் இணையதளம் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பாகியது.