மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119வது ஜெயந்தி, 64வது குருபூஜை விழாவை முன்னிட்டு கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜீவ், மதன் ராஜா ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் பாதுகாப்பு குளறுபடிகள் இருப்பதாக கூறினார். தேனி சிறையில் கதவுகள் பூட்டும் நடைமுறையில் உள்ள குறைபாடுகளை பயன்படுத்தி கைதிகள் தப்பியதாகவும், இதில் சிறை கண்காணிப்பாளருக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

சிறைகளின் பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்ய கடந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

மின்துறை தொடர்பாக, முக்கியஸ்தர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் மின்தடை ஏற்படும்படி மின்துறைக்குள் உள்ள சில நபர்கள் திட்டமிட்டு செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். துறை பொறுப்பில் இருப்பதால் இதுகுறித்து அதிகமாக பேச முடியாது என்றும் தெரிவித்தார். மேலும், அதிக விலைக்கு மின்சாரம் இன்னும் கொள்முதல் செய்யவில்லை; டெண்டர் மட்டுமே விடப்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் மீண்டும் டெண்டர் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இத்தகைய விஷயங்களில் சில நிறுவனங்கள் சிண்டிகேட் போல செயல்படுவதாகவும், மின் தட்டுப்பாடு இந்தியா முழுவதும் காணப்படுவதால் பல மாநிலங்களில் மின்வெட்டு நிலவுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.