பிரிட்டனைச் சேர்ந்த ஹிந்துக்களுக்கு ஆதரவான அமைப்பான ‘இன்சைட் யு.கே.’, பிரிட்டிஷ் ஹிந்துக்களுக்கான அனைத்துக்கட்சி பார்லிமென்ட் குழுவிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் பாகிஸ்தானில் ஹிந்துக்கள் திட்டமிட்டு ஒடுக்கப்படுவதாகவும், அவர்களின் சொத்துகள் பறிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அறிக்கையின் படி, 1941 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், தற்போதைய பாகிஸ்தான் நிலப்பரப்பில் ஹிந்துக்கள் 14.6% ஆக இருந்தனர். பிரிவினைக்குப் பிந்தைய காலகட்டத்தில் இந்த விகிதம் தொடர்ந்து சரிந்து, தற்போது பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 2% க்கும் குறைவாகவே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாட்டை விட்டு வெளியேறிய அல்லது கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான ஹிந்து குடும்பங்கள் ‘எதிரி சொத்து’ சட்டங்களின் கீழ் தங்கள் பூர்வீக நிலங்களையும் பண்ணைகளையும் இழந்ததாக அறிக்கை கூறுகிறது. இதனால் காலப்போக்கில் சமூகமே வறுமையில் தள்ளப்பட்டதுடன், நிரந்தர இடம்பெயர்வும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹிந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள், சிறுமிகள் கடத்தப்பட்டு, மதம் மாற்றப்பட்டு, கடத்தியவர்களுக்கே திருமணம் செய்து வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்த அறிக்கை, பாகிஸ்தானில் மதச் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு, சொத்து பறிப்பு மற்றும் கட்டாய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேவையை முன்வைக்கிறது.