அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் செஸ் கிளப்-இல் மூன்று நாள் ‘கிளட்ச்’ செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவ், அமெரிக்காவின் பேபியானோ காருவானா மற்றும் ஹிகாரு நகமுரா ஆகிய நான்கு முன்னணி வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

2வது நாளில் 4, 5, 6 ஆகிய சுற்றுகள் நடைபெற்றன. ஒவ்வொருவரும் மற்ற வீரர்களை தலா இருமுறை எதிர்கொண்டனர். சிந்தரோவ் எதிரான முதல் மோதலில் கருப்பு காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 39 நகர்த்தலில் வெற்றி பெற்றார்; அடுத்த ஆட்டத்தில் தோல்வியடைந்தார்.

5வது சுற்றில் நகமுராவை எதிர்கொண்ட பிரக்ஞானந்தா, இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று கவனம் ஈர்த்தார். முதல் ஆட்டத்தில் வெள்ளை காய்களுடன் 38 நகர்த்தலில் வென்ற அவர், அடுத்த ஆட்டத்தையும் 52வது நகர்த்தலில் கைப்பற்றினார்.

6வது சுற்றில் காருவானாவை சந்தித்த பிரக்ஞானந்தா, முதல் ஆட்டத்தில் கருப்பு காய்களுடன் 77வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இரண்டாவது ஆட்டம் 34 நகர்த்தலில் ‘டிரா’ ஆக முடிந்தது.

முதல் நாள் முடிவில் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருந்த பிரக்ஞானந்தா, 2வது நாளில் மொத்தம் 11 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறினார். அடுத்த இடங்களில் சிந்தரோவ் மற்றும் காருவானா தலா 8.5 புள்ளிகளுடன் இணைந்து உள்ளனர்; நகமுரா 8.0 புள்ளிகளுடன் தொடர்ந்து உள்ளார்.