சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் அருகே நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, திமுக எம்எல்ஏ சேகர்பாபு மற்றும் திமுக எம்பி கலாநிதி வீராசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி வரை லஞ்சம் வசூலித்ததாக கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ் அக்டோபர் 26 மாலை கைது செய்யப்பட்டார்.
அந்த கைது நடவடிக்கையின் போது சேகர்பாபு, கலாநிதி வீராசாமி உள்ளிட்ட திமுகவினர் போலீசாரை தடுத்து நிறுத்தி மிரட்டல் விடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனால் வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக வாசலில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் அவமரியாதையாக பேசுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு வேப்பேரி போலீசார் சேகர்பாபுவுக்கு சம்மன் அனுப்பினர். அதன்பேரில் அவர் நேரில் ஆஜரானார்.




