பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119வது ஜெயந்தி மற்றும் 64வது குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், அம்பாசமுத்திரத்தில் சீமானுக்கு திமுக ஆதரவு அளிக்கிறது என்ற தகவலை மறுத்தார். தற்போதைய ஆட்சி வர வேண்டும் என்று விரும்பிய மக்களே, இப்போது “இந்த ஆட்சி எப்போது ஒழியும்” என்ற நிலைக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மக்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார். கைதிகள் தப்பிச் செல்லும் நிலை இருப்பதாகவும், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகுவதோடு காணாமல் போகும் செய்திகள் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
முதல்வரின் செயல்பாட்டையும் விமர்சித்த அவர், ஐந்து மாத ஆட்சிக்கு “மதிப்பெண் ஜீரோ” என கூறினார். திமுகவினர் மீது மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகளை சட்டரீதியாக எதிர்கொண்டு வருவதாகவும், நீதிமன்றத்தில் குற்றவாளிகள் அல்ல என்பதை நிரூபிப்போம் என்றும் தெரிவித்தார்.
மேலும், நெருக்கடி நிலை மற்றும் மிசா சட்டம் போன்ற கடின காலங்களை திமுக எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட ஸ்டாலின், சந்திக்க வேண்டிய நேரத்தில் சந்திப்போம் எனவும் கூறினார்.




