தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் நவம்பர் 1 முதல் மழைச் செயல்பாடு தீவிரமடைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மைய இயக்குநர் வி.ஆர்.துரை கூறுகையில், அந்தப் பகுதியில் முன்தினம் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாகவும், அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த அமைப்பு நாளை தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (டிப்ரஷன்) வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், இது புயலாக மாறுமா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
வங்கக்கடலில் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருப்பதால், வடகிழக்கிலிருந்து தமிழகத்தை நோக்கி வீசும் காற்றின் ஓட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டது. அமைப்பு வலுப்பெறும் நிலையில் அது ஆந்திரா நோக்கி நகர அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அதே நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் நவம்பர் 1 முதல் மழையின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; அதிகபட்ச வெப்பநிலை சுமார் 36 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.




