சென்னை: தமிழகத்தில் தனியார் பங்கேற்புடன் மாதிரி பத்திரப்பதிவு மையங்கள் அமைப்பதற்கான டெண்டரில், தகுதி நிபந்தனைகள் டி.சி.எஸ். நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் சொத்து விற்பனை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை பதிவு செய்ய 589 சார்-பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்கு வரும் பொதுமக்களுக்கு போதிய வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.

‘ஸ்டார் 3.0’ மென்பொருள் அறிமுகத்தால் ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு செய்யும் வசதி வந்த நிலையில், அலுவலகங்களை நவீனப்படுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. இதனை முன்னிட்டு முதல் கட்டமாக 25 இடங்களில் மாதிரி பத்திரப்பதிவு மையங்களை அமைக்க பதிவுத்துறை முடிவு செய்து, நிறுவனத் தேர்வுக்காக டெண்டர் கோரியுள்ளது.

சென்னை மண்டலத்தில் ஐந்து அலுவலகங்கள் உட்பட 25 இடங்களில் ஏசி வசதியுடன் கார்ப்பரேட் அலுவலகம் போன்று மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் டெண்டரில் ‘பாஸ்போர்ட் சேவை மையங்களை நடத்தும் அனுபவம்’ தகுதியாக குறிப்பிடப்பட்டிருப்பது, அந்த சேவையை நடத்தி வரும் டி.சி.எஸ்.-க்கு முன்னுரிமை கிடைக்கும் வகையில் இருப்பதாக ஆவண எழுத்தர்கள் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் பதிவுத்துறையில் ‘ஸ்டார் 2.0’ மற்றும் ‘ஸ்டார் 3.0’ மென்பொருள்களை ஏற்கனவே டி.சி.எஸ். செயல்படுத்தி வருவதையும் சுட்டிக்காட்டி, இத்தகுதி விதிகள் போட்டியை குறைத்து குறிப்பிட்ட நிறுவனத்திற்கு வாய்ப்பை அதிகரிக்கக் கூடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.