முதல்வர் விஜய் தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில், அடுத்தாண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமித்து கணக்கெடுப்பை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்கி பகல் 12 மணிக்கு நிறைவடைந்தது. கனிம வளத்துறை அமைச்சர் பிரபு ஆஸ்திரேலியாவுக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் லண்டனுக்கும் சென்றிருந்ததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் நிர்மல்குமார் கூறுகையில், நான்கு முக்கிய விஷயங்களில் முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். எட்டு புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத் தடையை எதிர்த்து மூன்று நாட்களில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய ஆணையம் அமைக்கப்படும் என்றும், மார்ச் மாதத்தில் பணிகள் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். கணக்கெடுப்பில் மக்களின் பொருளாதார நிலை உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்படும் என கூறினார்.

மேலும், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே தாழம்பூரில் உரிமையாளர் பெயர் தெரியாத நிலங்கள் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சரவை விவாதித்ததாக அவர் கூறினார். அங்கு சுமார் 800 ஏக்கர் நிலப்பரப்பில் 3,000 குடும்பங்கள் வசிப்பதும், 15-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் இருப்பதும் குறிப்பிடப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.