புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையின் பாதுகாப்புக் குழு கூட்டத்தில், இந்திய கடற்படைக்காக ரூ.40,000 கோடிக்கு மேற்பட்ட மதிப்பில் எட்டு அடுத்த தலைமுறை அதிநவீன போர்க்கப்பல்கள் கட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல்கள் ‘அடுத்த தலைமுறை கார்வெட்’ வகையைச் சேர்ந்தவை என கடற்படை மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கு வங்கம் கொல்கட்டாவிலுள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் மற்றும் கோவா ஷிப்யார்டு லிமிடெட் ஆகிய பொதுத் துறை கப்பல் கட்டும் நிறுவனங்கள் இவற்றை தயாரிக்க உள்ளன. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடற்படை தரப்பில் கூறப்படுவதாவது: தலா சுமார் 2,000 டன் எடை கொண்ட இந்த அதிவேக கப்பல்கள் மணிக்கு 55 கி.மீ. வேகம் செல்லும் திறன் பெறும். எதிரிகளின் ரேடார்களில் எளிதில் சிக்காத வகையில் வடிவமைக்கப்படுவதுடன், கடற்படையே உருவாக்கிய வடிவமைப்பில் மேம்பட்ட கப்பல் கட்டுமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்.
கடலோரப் பாதுகாப்பு, கண்காணிப்பு, ரோந்து பணிகளுடன், எதிரி கப்பல்களை தாக்குதல், நீர்மூழ்கிக் கப்பல்களை எதிர்கொள்ளுதல், வான்வழி தாக்குதல்களை முறியடித்தல் போன்ற பணிகளிலும் இவை பயன்படுத்தப்படும். திட்டத்தில் 70%க்கும் அதிகமான உதிரிபாகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் உள்நாட்டிலேயே பெறப்படவுள்ளதுடன், முதல் கப்பலை 2030க்குள் கடற்படையிடம் ஒப்படைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




