சென்னை: புற்றுநோய் சிகிச்சைக்கான 543 மருந்துகளின் விலை குறைக்கப்பட்டாலும், அதிக விலை கொண்ட காப்புரிமை மருந்துகள் குறையாததால் நோயாளிகளுக்கு கிடைக்கும் நிவாரணம் வரம்புக்குள் தான் உள்ளது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் புற்றுநோய் மருந்துகளின் விலை மற்றும் அதில் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் விதிக்கும் லாப விகிதம் அதிகமாக இருப்பது குறித்து முன்பே விமர்சனங்கள் எழுந்த நிலையில், உச்ச நீதிமன்றமும் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, உற்பத்தி செலவின் மீது லாப வரம்பை 42.8% ஆக நிர்ணயித்து தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் 543 மருந்துகளுக்கான திருத்தப்பட்ட விலை பட்டியல் வெளியிடப்பட்டது.

அந்த பட்டியலில் சில மருந்துகளின் விலை அதிகபட்சமாக 93.2% வரை குறைந்ததாகவும், பல மருந்துகள் 80% முதல் 90% வரை குறைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வரவேற்பு பெற்றாலும், காப்புரிமை பெற்ற மருந்துகளின் விலை குறையாதது முக்கிய குறையாக நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

உதாரணமாக, ‘கீட்ருடா’ என்ற புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சை மருந்து தற்போது ரூ.2,16,500-க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், ‘பெஸ்கோ’ மருந்து ரூ.4,93,266-க்கு விற்பனையாக இருப்பதாகவும் அவர்கள் கூறினர். இதுபோல் பெரிய நிறுவனங்களின் காப்புரிமை பெற்ற சுமார் 36 மருந்துகள் இன்னும் உயர்ந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் நோயாளிகளுக்கு நிதி சலுகை வழங்க வேண்டும் அல்லது அந்த மருந்துகளை அரசு கொள்முதல் செய்து சலுகை விலையில் விநியோகிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.