திண்டுக்கலில் இறப்பு சான்றிதழில் உள்ள பிழையை திருத்துவதற்காக லஞ்சம் கேட்டதாக கூறப்படும் மாநகராட்சி சுகாதார அலுவலர் ஒருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குமார் (41) என்பவரின் தந்தை பொன்ராஜ் சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். அவருக்கான இறப்பு சான்றிதழில், பொன்ராஜின் மனைவியின் பெயர் “தமயந்தி லட்சுமி” என்பதற்கு பதிலாக “தமயந்தி” என மட்டும் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. இதை திருத்த மாநகராட்சி அலுவலகத்தில் குமார் மனு அளித்தார்.

இந்த திருத்தத்திற்காக சுகாதார அலுவலர் தங்கவேல் முதலில் ரூ.3,500 கேட்டதாகவும், பின்னர் ரூ.2,500 மட்டும் தருமாறு கூறியதாகவும் குமார் புகார் தெரிவித்தார். லஞ்சம் வழங்க விருப்பமில்லாததால் அவர் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பழனிசாமி உள்ளிட்ட குழுவினர் ரசாயனப் பொடி தடவிய ரூ.2,500 நோட்டுகளை குமாரிடம் கொடுத்து அனுப்பினர். வியாழக்கிழமை மதியம் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.2,500 பெற்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்கவேலை பிடித்து கைது செய்தனர்.

மேலும் சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து, மாநகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வன் மற்றும் மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் முருகானந்த் ஆகியோரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.