சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிர்வாகத்தை கண்காணிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு பிறப்பித்த உத்தரவைச் சார்ந்த மனுக்கள் விசாரணையில் இந்த உத்தரவு வெளியானது.
தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரசின் உத்தரவுக்கு ஆதரவாகவும் தனி மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுக்களை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மனோகரன் ஆகியோர் விசாரித்தனர்.
நீதிமன்றம் தனது உத்தரவில், 2014ல் கோயில் நிர்வாகத்தை தீட்சிதர்களிடம் ஒப்படைத்த பிறகும் கோயில் முறையாக நிர்வகிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டது. இதையடுத்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் (தலைவர்), ஓய்வு பெற்ற நீதிபதி சுரேஷ்குமார் (துணைத் தலைவர்) ஆகியோர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்படுகிறது.
குழுவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் உறுப்பினராகவும், பொது தீட்சிதர்கள் சங்கத்தின் செயலர் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை செயலர் ஆகியோர் அலுவல் சாரா உறுப்பினர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர். மேலும், அனுமதியின்றி கட்டப்பட்ட தேவையற்ற கட்டடங்கள் புராதன கட்டடங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, தமிழக புராதன சின்ன ஆணையத்துடன் ஆலோசித்து அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கவும், மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் சொத்துகளை மீட்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.




