குஜராத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற இந்தியர்கள் கடுமையாக உழைக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் குழப்பம் உருவாக்கும் நோக்கில் செயல்படுகின்றன என்று குற்றம்சாட்டினார். நாடு எப்போதும் இக்கட்டான சூழலில் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம் எனவும் அவர் கூறினார்.

மேற்காசிய பதற்றங்களால் நிச்சயமற்ற சூழல் உருவாகும் நேரங்களில், உரங்கள் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு இருப்பதாக திட்டமிட்டு வதந்திகளை பரப்பியதாக மோடி தெரிவித்தார். இது தனது நற்பெயரை கெடுக்கவே செய்யப்பட்டதாகவும், ஈரான்–அமெரிக்கா மோதல் போன்ற சூழல்கள் இதற்கு உதாரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சவால்களை நாடு ஒற்றுமையாக எதிர்கொண்டு வரும் வேளையில், எதிர்க்கட்சிகள் வதந்தி பரப்புவதிலேயே கவனம் செலுத்தி, உரங்களின் இருப்பு குறித்து விவசாயிகளை தவறாக வழிநடத்தியதாகவும், குழப்பம் ஏற்படுத்தி தன்னை அரசியல் ரீதியாக தாக்குவதே அவர்களின் திட்டம் எனவும் அவர் கூறினார்.

வேளாண்மைக்கு அரசு வழங்கும் ஆதரவைக் குறிப்பிட்ட மோடி, சர்வதேச சந்தையில் ரூ.3,000 அளவில் விற்கப்படும் யூரியா மூட்டை இந்திய விவசாயிகளுக்கு ரூ.300-க்கும் குறைவாக வழங்கப்படுவதாகவும், உலகளவில் ரூ.5,000 அளவில் விற்கப்படும் டி.ஏ.பி. உரம் ரூ.1,350-க்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்பில் நவீன அறிவியல், தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் 26 கோடிக்கும் அதிகமான மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், 2001 அக்டோபர் 7-ஆம் தேதி குஜராத் முதல்வராக முதன்முறையாக பதவியேற்றதை நினைவுகூர்ந்த அவர், அரசு தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததாக தெரிவித்தார். தனது கடைசி மூச்சுவரை மக்களுக்கு சேவையாற்றுவேன் என்றும் அவர் கூறினார்.