ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் உள்ள மருந்துக் கடையில் பணிபுரியும் இளைஞர் ஒருவரின் வங்கி கணக்கில் திடீரென ரூ.10,000 கோடி வரவு என காட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சமீர்கான் (22) என்ற அவர், மாதம் ரூ.10,000 சம்பளம் பெறுபவர். மொபைல் செயலி மூலம் கணக்கில் இருப்பை பார்த்தபோது முதலில் பூஜ்ஜியம் எனத் தோன்றியது. பின்னர் பரிவர்த்தனை விவரங்களை பார்த்ததில் ரூ.10,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டு உடனடியாக முடக்கப்பட்டதாக பதிவாகி இருந்தது.

அதே நேரத்தில், அவர் சேமித்து வைத்திருந்த ரூ.55,000 தொகையும் முடக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையின் அறிவுரைப்படி வங்கி கிளையை அணுகிய அவர், அங்கு மேற்கொண்ட ஆய்வில் இது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட பதிவு என தெரிய வந்தது. பின்னர் வங்கி அதிகாரிகள் பிரச்னையை சரிசெய்து கணக்கை வழக்க நிலைக்கு கொண்டு வந்தனர்.