அமெரிக்காவைச் சேர்ந்த அலிசன் என்ற பெண், பெங்களூருவில் திட்டமிடாமல் செய்துகொண்ட கண் அறுவை சிகிச்சைக்குப் பிறகு இந்திய மருத்துவத்தைப் பாராட்டியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்த அனுபவம் வைரலாகியுள்ளது.
எதிர்பாராத பரிசோதனை
பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நண்பருக்குத் துணையாக அலிசன் சென்றிருந்தார். அவருக்குக் கிட்டப்பார்வை குறைபாடு இருந்ததால், தனது கண்களையும் பரிசோதித்துப் பார்க்க முடிவு செய்தார். ஸ்கேன் முடிவைப் பார்த்த மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யலாம் என்று கூறி, அதற்கான செலவையும் தெரிவித்தனர்.
பல மடங்கு குறைந்த செலவு
அமெரிக்காவைவிடச் செலவு பல மடங்கு குறைவாக இருந்ததால், அலிசன் உடனே அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டார். சிகிச்சை முடிந்த ஏழு நாட்களுக்குள் தனது இரு கண்களிலும் பார்வை முழுமையாகத் தெளிவானதாக அவர் தெரிவித்துள்ளார்.
வைரலான பாராட்டு
காப்பீடு இல்லாதபோதும் தனக்கு எளிதாகச் சிகிச்சை கிடைத்ததாக அலிசன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஒரு மாதத் தொடர் சிகிச்சையும் அதே குறைந்த கட்டணத்தில் அடங்கியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க மருத்துவத்தைவிட இந்த அனுபவம் மிகச் சிறப்பாக இருந்ததாக அவர் விவரித்துள்ளார். அவரது பதிவு தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது.




