தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (நவம்பர் 1) ‘முரசு’ புயலாக வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கையின்படி, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான்–நிகோபார் தீவுகள் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை 5:30 மணியளவில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. பின்னர் நள்ளிரவில் மேலும் வலுப்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு இன்று பகல் 11:30 மணியளவில் புயலாக மாறி, தொடர்ந்து மேற்கு–வடமேற்கு திசையில் நகரும் என வானிலை மையம் தெரிவித்தது. நாளை மாலை ஆந்திரப் பிரதேச கடலோரத்திற்கு அருகிலுள்ள மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு நகரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேரளா–கர்நாடகா கடலோரத்திற்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் இருந்து, தெற்கு மஹாராஷ்டிரா கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று வட கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை நீலகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாகவும், நவம்பர் 3-ஆம் தேதி கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.