டெல்லியில் காங்கிரஸ் நடத்திய ‘மாதிரி பார்லிமென்ட்’ நிகழ்வை பா.ஜ.க. கடுமையாக கண்டித்துள்ளது. இது லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சமாதானப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட “போலி கூட்டம்” என பா.ஜ.க. செய்தித் தொடர்பாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சுதான்ஷு திரிவேதி விமர்சித்தார்.

இந்த நிகழ்வு, ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தின் புல்வெளியில் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்.) உள்ளிட்ட விவகாரங்களில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக கடந்த மாதம் வெளியான செய்தி அறிக்கையைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தை எதிர்த்து ‘இண்டி’ கூட்டணி நடத்தி வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக இதை காங்கிரஸ் முன்னிறுத்தியது. அந்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்திருந்தது.

பார்லிமென்டை ஒத்த வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு, முன்னாள் லோக்சபா சபாநாயகர் மீரா குமார் தலைமையில் நிகழ்வு நடத்தப்பட்டது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்யும் வகையில் ‘அடையாள பொது பதவிநீக்க நடவடிக்கை’ என்ற பெயரில் தீர்மானத்தை கார்கே தாக்கல் செய்தார். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் மற்றும் இண்டி கூட்டணி எம்.பி.க்கள் இதில் பங்கேற்றனர்.

ராகுல் காந்தி உரையாற்றும்போது, 2024 லோக்சபா தேர்தலில் மோசடிகள் நடந்ததாகவும், ஞானேஷ் குமார் பா.ஜ.க. “கைப்பாவை” போல செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக கூறி, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், ‘தேச துரோக’ குற்றச்சாட்டில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பின்னர் அந்த பதவிநீக்க தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த சுதான்ஷு திரிவேதி, எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டி, தேர்தலில் வென்று மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் பெற முடியாது என கூறினார். மேலும், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின் வறுமை குறைந்ததாக உலக வங்கி அறிக்கை சாட்சியெனவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, டெல்லி ராம்லீலா மைதானத்தில் இண்டி கூட்டணி சார்பில் இன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.