சென்னை வானகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமி, மின்சாரம் தாக்கிய விபத்தில் வலது கை இழந்த நிலையில், உதவி கோரி மனு அளித்துள்ளார்.
அவர் கூறுவதன்படி, 2025 ஜூன் 21 அன்று மதியம் 3 மணியளவில் திருவேற்காடு வீட்டருகே தோழி வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது, மாடி சுற்றுச்சுவருக்கு அருகே இருந்த மின்கம்பி விரலில் பட்டதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 2025 ஜூலை 11 அன்று மூட்டுக்கு கீழே வலது கை அகற்றப்பட்டது. இடது கை மணிக்கட்டுக்கு கீழுள்ள பகுதி இயக்கமின்றி இருப்பதால் அதற்கான சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கே.கே.நகர் அரசு புனர்வாழ்வு மருத்துவமனை மூலம் ‘செயற்கை கை’ வழங்கப்பட்டுள்ளதாகவும், தென்சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வழங்கிய சான்றிதழில் 75% நிரந்தர ஊனம் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் (அடையாள அட்டை எண்: 83602) அவர் தெரிவித்துள்ளார். யு.டி.ஐ.டி. தேசிய அடையாள அட்டையும் அவரிடம் உள்ளது.
இத்தனை ஆவணங்கள் இருந்தும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை இதுவரை கிடைக்கவில்லை என குடும்பம் தெரிவிக்கிறது. மகளை கவனிக்க வேண்டியதால் வேலைக்கு செல்ல முடியாமல் வறுமை சூழ்ந்ததாகக் கூறி, இடது கைக்கான உயர் சிகிச்சை உதவி மற்றும் அரசு விடுதியில் தங்க அனுமதி வழங்குமாறு ஆட்சியரிடம் தாயார் மனு அளித்தும் இதுவரை பதில் வரவில்லை என்றும் அவர்கள் கூறினர்.




