கோயில் ஊழியர்கள் கண்ணியமாக வாழ தேவையான அளவில் ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மதுரை கிளை சென்னை உயர் நீதிமன்றம் அறநிலையத் துறைக்கு (HR&CE) உத்தரவிட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான அல்லது குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் நியாயமான ஊதியம், பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டது.
நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், முருகன் அமர்வு, அறநிலையத் துறை அதிகாரிகள் அரசு ஊழியர்களாகக் கருதப்பட்டு ஊதியம் பெறுகிறார்கள்; ஆனால் கோயில் பணியாளர்களின் ஊதியம் கோயில் வருமானத்திலிருந்து வழங்கப்படுகிறது எனக் குறிப்பிட்டது. இதனால் போதிய சொத்துகள் அல்லது வருமானம் இல்லாத கோயில்களில் பணிபுரிவோருக்கு மிகக் குறைந்த ஊதியம் கிடைப்பதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
மேலும், 2021-ல் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் ஊதியம் மற்றும் அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் அது இதுவரை அமல்படுத்தப்படவில்லை என்று தெரிவித்தது. ஆயிரக்கணக்கான பணியாளர்கள் அடிப்படை வாழ்வாதாரத்திற்கே போதாத சொற்ப ஊதியம் பெறுகிறார்கள்; தேசிய அளவில் ஒரு நாளைக்கு ரூ.176 என்ற குறைந்தபட்ச ஊதிய அளவைக் காட்டிலும் குறைவாக சிலர் பெறுவதாகவும் குறிப்பிட்டது.
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு கோயிலின் பணியாளருக்கும் வாழ்வாதாரத்துக்கும் கண்ணியமான வாழ்க்கைக்கும் தேவையான ஊதியம் கிடைப்பதை உறுதி செய்து, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அமர்வு அறிவுறுத்தியது. இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இரண்டு மாதத்தில் அறநிலையத் துறை கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.




