தமிழகத்தின் பல இடங்களில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ள உலோக சிலைகள், சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு விரைவில் மாற்றப்படும் என ஹிந்து சமய அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கோவையை சேர்ந்த சிவ பக்தர் டி.சுரேஷ்பாபு தாக்கல் செய்த மனுவில், பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு ஆகம விதிகளின்படி பூஜைகள் நடைபெறவில்லை எனக் கூறி, அவற்றை மீண்டும் கோவில்களுக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அறநிலையத் துறை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், பாதுகாப்பு மையங்களில் ஆகம விதிகளின்படி பூஜைகள் மற்றும் சடங்குகள் நடத்தப்படுகின்றன என்றும், சில மையங்களில் இதற்காக தனிப்பட்ட அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சிலைகளை பாதுகாக்க 1,881 கோவில்களில் தனி அறைகள் கட்டப்பட்டு வருவதாகவும், 1,782 கோவில்களில் கட்டுமானம் முடிந்துள்ளதாகவும் கூறப்பட்டது. மீதமுள்ள 99 கோவில்களிலும் பணிகள் முடிந்ததும், பாதுகாப்பு மையங்களில் உள்ள உலோக சிலைகள் சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.




