டெஹ்ரான்: அமெரிக்காவின் எந்தவொரு அச்சுறுத்தல் அல்லது தாக்குதலுக்கும் “உடனடி மற்றும் வலுவான” பதிலடி கொடுக்க, அதுவும் ஈரானின் புவியியல் எல்லைகளைத் தாண்டியும் செயல்பட தயாராக இருக்குமாறு ஈரான் ராணுவத்துக்கு உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உத்தரவிட்டுள்ளார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரித்து அதை அமெரிக்கா, இஸ்ரேல் மீது பயன்படுத்தக்கூடும் என்ற அச்சுறுத்தலை முன்வைத்து, அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தாக்குதலில் அந்நாட்டின் அப்போதைய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்தார். இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை இலக்காக வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

மார்ச் 8 அன்று அயதுல்லாவின் மகன் மொஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஈரானின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மோதலை எப்போது முடிவுக்கு கொண்டுவருவது மற்றும் அதற்கான நிபந்தனைகள் என்ன என்பதைக் ஈரானே தீர்மானிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அனைத்து வகையான சொத்துகளையும் தாக்குதல் இலக்குகளாகக் கொண்டு இலக்கு பட்டியலைப் புதுப்பிக்க வேண்டும், வெடிமருந்துகள் மற்றும் ஆயுத உற்பத்தியை அதிகரிக்க வேண்டும், ராணுவ உளவுத்துறையை வலுப்படுத்தி உள்நாட்டு பாதுகாப்புத் திறன்களையும் மேம்படுத்த வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்புக்கும் சவுதி அரசு படைகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதாகவும், போரை முடிவுக்கு கொண்டுவர கத்தார் அதிகாரிகள் மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அணுசக்தி பேச்சை முதலில் தொடங்கலாமா அல்லது ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகையை நீக்கலாமா என்பதில் கருத்து வேறுபாடு நீடிப்பதாக கூறப்படுகிறது.