புதுடில்லி: மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சவுரப் சந்திரகர், ஓமனிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இந்திய விசாரணை அமைப்புகள், இன்டர்போல் மற்றும் ஓமன் அரசு இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் பலனாக இது சாத்தியமானது.

மகாதேவ் செயலி செயல்பாடு

சத்தீஸ்கரைச் சேர்ந்த சவுரப் சந்திரகர், ரவி உப்பால் ஆகிய இருவரும், ஐக்கிய அரபு எமிரேட்சைத் தலைமையிடமாகக் கொண்டு மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலியை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. 2019 முதல் இந்தச் செயலி மூலம் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாயை மோசடியாக ஈட்டியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிபிஐக்கு மாற்றப்பட்ட வழக்குகள்

சத்தீஸ்கரின் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான 13 வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி மாநில அரசு உத்தரவிட்டது. குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதுடன், அவர்களின் சொத்துகளும் முடக்கப்பட்டன. சவுரப் சந்திரகருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது.

ஓமனில் கைது, நாடு கடத்தல்

சவுரப் சந்திரகர் ஓமனில் தங்கியிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டு போலீசார் அவரைக் கைது செய்தனர். அவரை நாடு கடத்துமாறு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஓமன் அரசிடம் கோரிக்கை விடுத்தனர். ஓமன் அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து, சிபிஐ அதிகாரிகள் மஸ்கட் சென்று அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்தனர்.

சத்தீஸ்கரின் ராய்ப்பூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.