மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட மின் சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை (HR&CE) அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கோவிலுக்கு வந்தபோது பாதுகாப்பு நடைமுறைப்படி ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டதாகவும், அவர் புறப்பட்டுவிட்டார் என நினைத்து ‘சுவிட்ச் ஆப்’ செய்ததில் குழப்பம் ஏற்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

இது மின்தடை அல்ல; செயல்பாட்டு தவறு என அவர் விளக்கினார். அந்த தவறுக்கு காரணமான அறநிலையத்துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மதுரை வணிகவரித்துறை இணை கமிஷனர் அலுவலகத்தில் பணியாளர் பயிற்சி நிறுவனக் கட்டடத்தைத் திறந்து வைத்த பின்னர் பேசிய அவர், மின் பிரச்னைகளை சரி செய்ய குழுக்கள் அமைத்து கண்காணித்து வருவதாக கூறினார். பழைய டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் மின் வழித்தடங்கள் சீரமைக்கப்படுவதாகவும், மின்துறை நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தனது பதவி விலக வேண்டும் என கூறியதற்கு, தினமும் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக அவர் பேசுகிறார் என அமைச்சர் பதிலளித்தார். மேலும், தேனி சிறையில் கைதிகள் தப்பித்த சம்பவத்தை விசாரிக்க குழு அமைக்கப்படும் என்றும் கூறினார்.