எஸ்ஐஆர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி நடத்தி வரும் போராட்டத்திற்குப் பதிலடியாக, பாஜ தலைவர் நிதின் நபின் ஹரியானா மாநிலம் ரோதக்கில் பேரணி நடத்தினார். இந்நிகழ்வில் அவர் காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர் ராகுலையும் கடுமையாக விமர்சித்தார்.

தேர்தல் தோல்விகளால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே காங்கிரஸ் ஜனநாயக அமைப்புகளைத் தாக்கி வருவதாக நபின் குற்றம் சாட்டினார். அரசியலமைப்பின் பாதுகாவலர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டு, உண்மையில் வாரிசு அரசியலை வளர்த்து, அரசியலமைப்பு நெறிமுறைகளைச் சீர்குலைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

‘காங்கிரஸில் ஒரே குடும்பத்தின் ஆட்சி’

காங்கிரஸ் தலைவர்களுக்கு உண்மையிலேயே பலம் இருந்திருந்தால், முதலில் தங்கள் கட்சிக்குள் நீடிக்கும் ராகுலின் வாரிசு அரசியலைத் தகர்த்து ஜனநாயகத்தை நிலைநாட்டியிருப்பார்கள் என்று நபின் கூறினார். காங்கிரஸில் ஒரே குடும்பத்தின் ஆட்சிக்கு மட்டுமே இடம் இருப்பதாகவும், ராகுல் அல்லது அவரது குடும்பத்தினரின் உத்தரவையே முழுமையான உண்மையாகக் கருதி அக்கட்சித் தலைவர்கள் செயல்படுவதாகவும் அவர் விமர்சித்தார். நாட்டின் சட்டங்கள் ராகுலின் விருப்பப்படி உருவாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் நம்புவதாகவும் குறிப்பிட்டார். “அரசியலமைப்பின் பிரதியைக் கையில் ஏந்திக்கொண்டு சுற்றுகிறீர்கள்; ஆனால் காங்கிரஸ் கட்சியினரே அதன் பக்கங்களைக் கிழித்துச் சின்னாபின்னமாக்கியுள்ளனர்” என்றும் அவர் சாடினார்.

ராகுலின் நோக்கம் குறித்து கேள்வி

நாட்டின் 140 கோடி மக்கள் மீது காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை என்று குற்றம் சாட்டிய நபின், “பிறகு யாரை நம்புவீர்கள்? 3 கோடி ஊடுருவல்காரர்களையா?” என்று கேள்வி எழுப்பினார். ராகுலின் உண்மையான நோக்கம் என்ன, ஜனநாயகத்திற்கு ஏன் சவால் விடுக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்க விரும்புவதாகவும் தெரிவித்தார். ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பே முக்கியமானது என்றும், தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறி அவர் தனது உரையை நிறைவு செய்தார்.