சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற்றுத் தந்தால் ரூ.5 கோடி தருவதாக ஒருவர் பேரம் பேசியதாகத் தெரிவித்தார். அந்த வாய்ப்பைச் சிரித்தபடியே மறுத்து, லயோலா மணி மூலம் பதில் அனுப்பியதாக அவர் கூறினார்.
ரூ.500 கோடி கொடுத்தாலும் தகுதியில்லாத ஒருவருக்கு முதல்வர் விஜய் எந்தப் பதவியையும் வழங்கமாட்டார் என்றும், தான் தளபதியின் தம்பி என்றும் சொல்லி அனுப்பியதாக ராஜ்மோகன் தெரிவித்தார். தகுதியுள்ள குப்புசாமிக்கு ஒரு ரூபாய் கூடப் பெறாமல் அந்தப் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வாரம் ஒருநாள் மரபு ஆடை தினம்
அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஒருநாள் மரபு ஆடை தினம் கடைபிடிக்கப்படும் என்றும், அன்று அரசு ஊழியர்களும் அமைச்சர்களும் வேட்டி, சேலை அணிந்து பணிக்கு வருவார்கள் என்றும் அமைச்சர் அறிவித்தார். முதல்வர் வாரம் ஒருநாள் பட்டு வேட்டி, சட்டை அணிந்து வருவதைக் கண்டு இந்த யோசனையை முன்வைத்ததாக அவர் கூறினார். இதுகுறித்து அதிகாரிகளிடம் கலந்தாலோசித்தீர்களா என முதலில் கேட்ட முதல்வர், பின்னர் கைத்தறி நெசவாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அனுமதி அளித்ததாக அவர் தெரிவித்தார். அமைச்சர் ஆதவின் உயரத்துக்கு ஏற்ப புதிதாக வேட்டி தயாரிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
நவம்பர் 1-ஐ தமிழ்நாடு நாளாக அறிவித்ததற்கும், சட்டப்பேரவையில் பேசும் வாய்ப்பை வழங்கியதற்கும் முதல்வர் விஜய்க்கு ராஜ்மோகன் நன்றி தெரிவித்தார்.
தமிழ் வளர்ச்சி அறிவிப்புகள்
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேசிய அமைச்சர், தலைமைச் செயலகத்தில் தமிழ்ச் சங்கம் அமைக்கப்படும் என்றும், அதன் தலைவராக முதல்வர் விஜய் செயல்படுவார் என்றும் அறிவித்தார். உலகெங்கும் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தப்படும் என்றும், ‘தமிழ் பேச்சு, எங்கள் உயிர் மூச்சு’ என்ற பெயரில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ்ப் போட்டிகள் நடத்தப்பட்டு, தமிழ் அறிந்த குழந்தைகள் கொண்டாடப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.




