ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறார். தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த 25 அதிருப்தி எம்எல்ஏக்கள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று எச்சரித்துள்ளனர்.
90 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபையில், ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 41 எம்எல்ஏக்கள் உள்ளனர். சமீபத்தில் ஒமர் அப்துல்லா தனது அமைச்சரவையில் மேற்கொண்ட அதிரடி மாற்றங்கள் கட்சிக்குள் பல சர்ச்சைகளை எழுப்பின. அதன் தொடர்ச்சியாகவே இந்த அதிருப்தி வெடித்துள்ளது.
அதிருப்தி எம்எல்ஏக்களின் கோரிக்கைகள்
தற்போதைய அமைச்சர்கள் அனைவரையும் பதவியிலிருந்து நீக்கி, தகுதியின் அடிப்படையில் புதிய அமைச்சரவையை அமைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், முதல்வரின் தலைமை ஆலோசகரை நீக்க வேண்டும் என்றும், சட்டப்பிரிவு 370 மற்றும் 35A ஆகியவற்றை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
14 நாள் கெடு
இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து 14 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வருக்கு அவர்கள் கெடு விதித்துள்ளனர். தவறினால், கவர்னர் மாளிகைக்குப் பேரணியாகச் சென்று அரசுக்கான ஆதரவை முறைப்படி விலக்கிக் கொள்வோம் என்று எச்சரித்துள்ளனர். அவ்வாறு நடந்தால், ஒமர் அப்துல்லா தலைமையிலான அரசு கவிழும் அபாயம் உள்ளது.
இதற்கிடையே, மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவை முதல்வர் மம்தா பானர்ஜியால் இன்னும் சரிசெய்ய முடியாத நிலை நீடிக்கிறது.




