மஹாராஷ்டிர மாநில நாசிக் மாவட்டத்தின் திரிம்பகேஸ்வர் க்ஷேத்திரத்தில் சிம்மஸ்த கும்பமேளா தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம், ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசன்னிதானத்தின் ஆசியுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க கொடியேற்றத்தையும் முதல் புண்ணிய நீராடலையும் நடத்தினார்.

முக்கிய நிகழ்வுகளுக்கு முன்பாக மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஜகத்குருவைத் தரிசித்து ஆசி பெற்றார். கணபதி பூஜை தொடங்குவதற்கு முன் ஜகத்குரு அவருக்கு ருத்ராட்ச மாலையைப் பிரசாதமாக வழங்கினார். தொடர்ந்து, மஹாராஷ்டிர மக்கள் சார்பாக கொடியேற்றத்துக்கான சங்கல்பத்தை முதல்வர் மேற்கொண்டார்.

திரிம்பகேஸ்வர் க்ஷேத்திரத்தில் உள்ள குசாவர்த்த தீர்த்தம், புனித கோதாவரி நதி தோன்றும் இடமாகப் போற்றப்படுகிறது. இங்கு கொடியேற்றத்துக்கு முன்னதாக ஜகத்குரு கொடிமரம் மற்றும் கொடிக்கு பூஜைகளைச் செய்தார்; முதல்வரும் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டார். சுபமுகூர்த்தத்தில் குசாவர்த்த தீர்த்தத்தில் தொடக்க விழா நடைபெற்றது.

விழாவுக்குப் பிறகு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் அவரது மனைவி அம்ருதா பட்னாவிஸும் ஜகத்குருவுக்கு மரியாதை செலுத்தி ஆசி பெற்றனர். அப்போது அவர்களுக்கு சாரதாம்பாளின் திருவுருவச் சிலையும், வித்யாசங்கரர் கோவிலின் மாதிரிச் சிலையும் ஜகத்குருவால் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான சாதுக்கள், ஆச்சாரியர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.