தமிழக கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் கீழ் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் செயல்படும் மாவட்ட அரசு இசைப்பள்ளி, தங்களுடைய மாணவர்களுக்கும் அரசு மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.
27 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் என ஏழு துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. சேர்வதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 8ம் வகுப்பு; அதிகபட்ச வயது 25 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 500 கலைஞர்களை உருவாக்கியுள்ள இந்த பள்ளி, 2023ம் ஆண்டு வரை மறைந்த தமிழிசை பாடகர் சீர்காழி கோவிந்தராஜனின் இல்லத்தில் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. தற்போது 55 மாணவ, மாணவியர் இங்கு பயில்கின்றனர்.
வயலின் துறை மாணவி க. பிரியங்கா, தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றபோது கர்நாடக இசையில் தன்னிடம் இருந்த குறைபாடுகள் புரிந்ததாகவும், அவற்றை சரிசெய்ததுடன் வயலின் மற்றும் தேவாரம் பாடலும் கற்றுத்தந்து தன் திறனை உயர்த்தியதாகவும் தெரிவித்தார்.
தலைமை ஆசிரியை பா. சுமதி, மாணவர்களின் மதிய உணவுக்கான செலவை ஆசிரியர்கள் தாங்களே பங்கிட்டு ஏற்றுக் கொள்வதாக கூறினார். பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடைமுறையில் உள்ள மதிய உணவு திட்டத்தை இந்த இசைப்பள்ளிக்கும் கொண்டு வந்தால், எளிய குடும்பங்களைச் சேர்ந்த மேலும் பல மாணவர்களை ஈர்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.




