பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள், போதைப்பொருள் தொடர்பான குற்ற வழக்குகள் ஆகியவற்றை விசாரிப்பதற்காக தமிழகத்தில் 30 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்குகளை துரிதமாக முடிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நிலுவை போக்சோ வழக்குகள் குறித்த ஆய்வு
தமிழகம் முழுவதும் நிலுவையில் உள்ள போக்சோ வழக்குகளின் நிலை குறித்து முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றதாக அரசு அறிக்கை தெரிவிக்கிறது. இதில், வழக்கு விசாரணையை விரைவுபடுத்தி, குற்றம் நிரூபிக்கப்படுவோருக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் போக்சோ நீதிமன்றங்களை அமைக்கவும் முதல்வர் உத்தரவிட்டார்.
தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை மட்டும் விசாரிக்க மாநிலத்தில் 22 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன; மேலும் நான்கு நீதிமன்றங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளன. நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, 12 புதிய சிறப்பு நீதிமன்றங்கள், 14 கூடுதல் சிறப்பு நீதிமன்றங்கள் என மொத்தம் 26 சிறப்பு நீதிமன்றங்களை ரூ.46.5 கோடி செலவில் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் 47 காவல் மாவட்டங்களில் 52 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படும்.
இதனால் பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் நீதி கிடைப்பதுடன், கொடூரக் குற்றங்கள் மீண்டும் நிகழ்வது தடுக்கப்படும் என்றும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை உறுதி செய்யப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் வழக்குகளுக்கு 4 புதிய நீதிமன்றங்கள்
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த, தமிழகத்தில் தற்போது 11 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டிய அவசியத்தைக் கருதி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றமும், சென்னையில் ஒரு கூடுதல் சிறப்பு நீதிமன்றமும் அமைக்க முதல்வரின் உத்தரவுப்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் அரசின் இலக்கை நோக்கி இது வழிவகுக்கும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




