கோவையில் மட்டுமல்ல, தமிழகமெங்கும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மாதச் செலவு அதிகரித்து, சம்பளதாரர்கள் மற்றும் குறைந்த வருமானக் குடும்பங்கள் கடும் சுமையை எதிர்கொள்கின்றன.
கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக விலை ஏற்றம் தொடர்வதாக கூறப்படும் நிலையில், மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. வியாபாரிகள் தரப்பில், சர்வதேச போர் சூழல் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் அதனால் உயர்ந்த பெட்ரோல்–டீசல் விலை, அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் மேலே தள்ளியதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் கணேசன் கூறுகையில், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மளிகைப் பொருட்களில் ஏற்றம் காணப்படுவதாகவும், வெளிநாட்டிலிருந்து பெருமளவு இறக்குமதி செய்யப்படும் சன் பிளவர் ஆயில் உள்ளிட்ட எண்ணெய்களின் விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், நெய் ஆகியவற்றிலும் உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும், பல மளிகைப் பொருட்கள் கிலோவுக்கு ரூ.25 முதல் ரூ.100 வரை அதிகரித்துள்ளதாகவும் கூறினார். இஞ்சி, பூண்டு போன்றவற்றும் உயர்ந்த விலையில் விற்பனையாகின்றன.
கோயம்புத்தூர் அரிசி வியாபாரிகள் சங்க செயலாளர் சரவணகுமார் கூறுகையில், வழக்கமாக அக்.–டிச. காலத்தில் கிலோவுக்கு ரூ.4 வரை மட்டுமே விலை வித்தியாசம் இருக்கும் நிலையில், இந்தாண்டு ரூ.10 வரை உயர்ந்திருப்பது அபூர்வம் என்றார். தென் மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பொய்த்தது, விளைநிலங்கள் குறைவது, மேலும் டாலர் தேவையால் ஏற்றுமதி தொடர்வது போன்ற காரணங்களால் விலையேற்றம் தவிர்க்க முடியாததாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
சமீபத்தில் நல்ல மழை பெய்துள்ளதால் டிசம்பர் 15க்கு பிறகு மளிகைப் பொருட்களின் விலை குறையத் தொடங்கும் எனவும், 2027 ஜனவரியில் அரிசி வரத்து அதிகரித்தால் விலை தணிய வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். சென்னை சந்தைகளுக்கு ஆந்திரா நெல் வரத்து தொடர்வதும் விலைக்கு ஓரளவு தணிவு தரலாம் என கூறப்படுகிறது.




