பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஜெர்மனியில் உள்ள முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கும் நோக்கில், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு அந்நாட்டிற்கு ஒரு வாரப் பயணம் மேற்கொள்கிறது.

மேம்பட்ட உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ், மோட்டார் வாகனம் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்க்க இக்குழு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட அறிக்கையில், ஜெர்மன் தொழில் துறையுடனான சந்திப்புகளில் மேம்பட்ட உற்பத்தியில் மட்டுமின்றி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை ஈர்ப்பது, தொழில்நுட்பக் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவது, புத்தாக்கத்தை வளர்ப்பது, தொழில் துறை - கல்வித் துறை இடையிலான ஒத்துழைப்பை உருவாக்குவது ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

“உற்பத்தி முதல் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் வரை நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கத் தேவையான திறமை, தொழில்துறைச் சூழல் மற்றும் உள்கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது” என்று குறிப்பிட்ட அமைச்சர், இந்தக் கூட்டாண்மைகளை ஆழப்படுத்தி, உற்பத்தி மற்றும் புத்தாக்கம் ஆகிய இரண்டிற்கும் தமிழகத்தை விரும்பத்தக்க இடமாக நிலைநிறுத்த விரும்புவதாகவும் கூறியுள்ளார்.