பாட்னா: பீஹார் சட்ட மேலவைத் தேர்தலில் அண்மையில் வெற்றி பெற்ற இரு சுயேச்சை வேட்பாளர்கள், பாரதிய ஜனதா கட்சியில் (பா.ஜ.க.) இணைந்துள்ளனர்.

பீஹாரில் பா.ஜ.க.வைச் சேர்ந்த முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்தலில், ஆளும் பா.ஜ.க. கூட்டணி மூன்று இடங்களையும், எதிர்க்கட்சியான லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் இரண்டு இடங்களையும், சுயேச்சைகள் இரண்டு இடங்களையும், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சூரஜ் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றின.

திர்ஹுத் பட்டதாரிகள் தொகுதியில் வென்ற பன்ஷிதார் பிரஜ்வாசி, சரண் ஆசிரியர்கள் தொகுதியில் வென்ற ராகுல் ராஜ் ஆகிய இருவரும், முதல்வர் சாம்ராட் சவுத்ரி முன்னிலையில் பா.ஜ.க.வில் முறைப்படி இணைந்தனர்.

ராகுல் ராஜ் ஏற்கனவே பா.ஜ.க. உறுப்பினராக இருந்தவர். சரண் தொகுதியில் கட்சி வேறொரு வேட்பாளரை நிறுத்தியதால், அவர் சுயேச்சையாகக் களமிறங்கினார். இதனால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது அவர் மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

புதிதாகத் தேர்வான இந்த இருவரும் பதவியேற்பதற்கு முன்பே பா.ஜ.க.வில் சேர்ந்ததற்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.