டாஸ்மாக் மதுக்கடைகளில் திருப்பித் தரப்படும் ஒவ்வொரு காலி பாட்டிலுக்கும் ரூ.10 வழங்கும் புதிய நடைமுறை நவம்பர் 1, ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வந்தது. கோவையில் இத்திட்டத்துக்கு கடை ஊழியர்கள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தனர். விற்பனை கவுன்டர்களை அதிகரிக்காமல் இதை அமல்படுத்துவதால் தங்களுக்குப் பணிச்சுமை கடுமையாகக் கூடும் என்பது அவர்களின் வாதம்.
போராட்டத்தால் கடைகள் தாமதம்
வழக்கமாக டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணிக்குத் திறக்கப்படும். ஆனால் ஞாயிறன்று காலை 10 மணி முதலே ஊழியர்கள் பீளமேட்டில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடைகள் குறித்த நேரத்தில் திறக்கப்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் டாஸ்மாக் வடக்கு மாவட்ட மேலாளர் விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின்போது ஊழியர்கள் தங்கள் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர். தினசரி விற்பனைத் தொகையை வங்கியில் செலுத்துவது போலவே இந்தத் தொகையையும் வங்கியில் செலுத்தத் தயார் என்றும், ஆனால் காலி பாட்டில்களைச் சேகரிக்கும் பணியைத் தங்கள் மீது திணிக்கக் கூடாது என்றும் அவர்கள் கூறினர். இதற்கென தனி இயந்திரங்கள் அமைக்கப்பட வேண்டும்; அதுவரை பாட்டில் சேகரிப்பு மற்றும் பார் ஒப்பந்தம் எடுத்தவர்களைக் கொண்டே இப்பணியைக் கையாள வேண்டும் என்று வலியுறுத்தினர். உடையும் காலி பாட்டில்களுக்கு ஊழியர்களைப் பொறுப்பாக்குவதை ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
உறுதிமொழியை ஏற்று போராட்டம் வாபஸ்
இப்பிரச்னைகள் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, ஒவ்வொன்றாகத் தீர்க்கப்படும் என்று மேலாளர் விஸ்வநாதன் உறுதியளித்தார். இதை ஏற்றுக்கொண்ட ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். அதன்பின் மதியம் 2 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
காத்திருந்த மதுப்பிரியர்கள் ஏமாற்றம்
ஞாயிற்றுக்கிழமை என்பதால் நண்பகல் 12 மணி முதலே டாஸ்மாக் கடைகள் முன்பு மதுப்பிரியர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். கடைகள் திறக்கப்படாததால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். மசக்காளிபாளையத்தில் சாலை மறியல் நடைபெற்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. டாஸ்மாக் கடைகள் இரண்டு மணி நேரம் மூடப்பட்டிருந்ததால், காலை 11 முதல் இரவு 11 மணி வரை இயங்கும் மனமகிழ் மன்றங்களில் மதுப்பிரியர்கள் பெருமளவில் திரண்டனர்.




