டில்லியையும் அசாமின் குவஹாத்தியையும் இணைக்கும் புதிய வடக்கு புல்லட் ரயில் வழித்தடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். இதை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி செய்தார். நாட்டின் முதல் அதிவேக ரயில் திட்டமான மும்பை - ஆமதாபாத் வழித்தடப் பணிகள் 62 சதவீதத்தைக் கடந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மஹாராஷ்டிராவின் புனே - கர்நாடகாவின் பெங்களூரு இடையே புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மும்பை - ஆமதாபாத் திட்ட முன்னேற்றம்
நாட்டில் புல்லட் ரயில் சேவையை அறிமுகப்படுத்த, தேசிய அதிவேக ரயில் நிறுவனம் (என்.எச்.எஸ்.ஆர்.சி.எல்.) அமைக்கப்பட்டது. இந்நிறுவனம் நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. ஜப்பானின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் 508 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படும் மும்பை - ஆமதாபாத் வழித்தடத்தில், ரயில்கள் மணிக்கு அதிகபட்சம் 320 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். பல கட்டங்களாக நடைபெறும் கட்டுமானப் பணிகள் இதுவரை 62.16 சதவீதம் நிறைவடைந்துள்ளன. நாட்டின் முதல் புல்லட் ரயில் 2029-ல் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கை இணைக்கும் வடக்கு வழித்தடம்
புதிய டில்லி - குவஹாத்தி வழித்தடம் மேற்கு வங்கத்தின் சிலிகுரி வழியாக அமையும். வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கியப் புவியியல் பகுதியாக சிலிகுரி விளங்குகிறது. இந்த வழித்தடம் உத்தர பிரதேசத்தின் ஆக்ரா, லக்னோ, கான்பூர், வாரணாசி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழியாகவும், பீஹாரின் முக்கிய நகரங்கள் வழியாகவும் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இது செயல்பாட்டுக்கு வந்ததும், டில்லி - ஆக்ரா பயணம் 59 நிமிடங்களிலும், டில்லி - கான்பூர் பயணம் 1 மணி நேரம் 45 நிமிடங்களிலும், டில்லி - லக்னோ பயணம் 2 மணி நேரம் 12 நிமிடங்களிலும் சாத்தியமாகும். சாலை அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களில் இதே பயணங்களுக்கு மூன்று மடங்கு அதிக நேரம் ஆகிறது.
தெற்கு வழித்தடத் திட்டம்
பெங்களூரில் பெங்களூரு - மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தபோது அமைச்சர் வைஷ்ணவ் இந்த விவரங்களைத் தெரிவித்தார். ஏற்கனவே 4,000 கி.மீ. தொலைவுக்கான புல்லட் ரயில் வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த சில ஆண்டுகளில் மேலும் 3,000 கி.மீ. வழித்தடங்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். தெற்கு வழித்தடம் புனே, ஹைதராபாத், அமராவதி, சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பெங்களூரு - சென்னை பயண நேரம் 1 மணி நேரம் 13 நிமிடங்களாகவும், பெங்களூரு - ஹைதராபாத் பயண நேரம் 2 மணி நேரம் 10 நிமிடங்களாகவும் குறையும் என அவர் தெரிவித்தார். பெங்களூரு - புனே வழித்தடம் ஹுப்பள்ளி வழியாகச் சென்று கர்நாடகாவின் பல பகுதிகளை இணைக்கும்.
இந்த முடிவை அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வரவேற்றுள்ளார். டில்லி - குவஹாத்தி இடையே எட்டு மணி நேரத்துக்குள் பயணிக்க முடியும் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார். முதலில் சிலிகுரியுடன் முடிவடைய இருந்த இந்த வழித்தடம், தனது கோரிக்கையை ஏற்று வடகிழக்கு மாநிலங்கள் வரை நீட்டிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இது வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் முக்கிய மைல்கல் எனக் கூறிய அவர், பிரதமர் மோடிக்கும் அமைச்சர் வைஷ்ணவுக்கும் நன்றி தெரிவித்தார்.




