எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி நடத்திய பொதுக்கூட்டத்தால், தீபாவளி பண்டிகை காலத்தில் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக டில்லி வர்த்தகர்கள் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

தேர்தல் கமிஷனர் பதவி விலகக் கோரி பேரணி

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டில்லி ராம் லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதற்கு முன்பு, கன்னாட் பிளேஸில் உள்ள மின்டோ சாலையிலிருந்து ராம் லீலா மைதானம் வரை கூட்டணித் தலைவர்கள் திறந்த வாகனத்தில் பயணம் செய்தனர். இதில் ராகுல், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பெரும் இழப்பு என வர்த்தகர்கள் குற்றச்சாட்டு

பண்டிகை காலத்தில் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கிலேயே பேரணியை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்ததாக டில்லி வர்த்தகர்கள் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜேஷ் கோயல் தெரிவித்தார். தங்களை பா.ஜ.க.வின் முகவர்கள் என்று குறிப்பிடுவது தவறு என்றும் அவர் கூறினார்.

மத்திய மற்றும் பழைய டில்லியில் உள்ள 20 முக்கிய சந்தைகளில் நாள்தோறும் சுமார் 12,000 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறுவதாகவும், இந்தப் பேரணியால் அதில் 80 சதவீதம் பாதிக்கப்பட்டதாகவும் கோயல் தெரிவித்தார்.

‘மக்கள் எங்கே பொருட்கள் வாங்குவார்கள்?’

உள்ளூர் வியாபாரிகளை ஆதரிக்க வேண்டும் என ராகுல் பேசி வருவதைச் சுட்டிக்காட்டிய கோயல், 2.5 லட்சம் கடைகள் மூடப்பட்டு, சாலைகள் மறிக்கப்பட்ட நிலையில், பேரணிக்கு வரும் மக்கள் எங்கே சென்று பொருட்களை வாங்குவார்கள் என்று கேள்வி எழுப்பினார்.