சென்னை: நவம்பர் 1 எல்லைப் போராட்ட தியாகிகள் நாள் என்ற வரலாற்றை அரசியல் காரணங்களுக்காக மாற்றக் கூடாது என்று திமுக தலைமை வலியுறுத்தியுள்ளது. இந்த அறிக்கை, எந்த நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாட வேண்டும் என்ற விவாதத்தைத் தூண்டியுள்ளது.

தமிழகத்தின் தற்போதைய ஆட்சியாளர்கள் நவம்பர் 1-ஐ ‘தமிழ்நாடு நாள்’ என வாழ்த்து தெரிவித்து வருவதை திமுக தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. 1956 நவம்பர் 1 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்பு நடைமுறைக்கு வந்ததால், மொழியுரிமைக்காகத் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தவர்களை நினைவுகூர வேண்டிய நாள் அது என்றும், அதுவே எல்லைப் போராட்ட தியாகிகள் நாள் என்றும் கட்சி கூறியுள்ளது.

‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றக் கோரி உண்ணாவிரதம் இருந்து சங்கரலிங்கனார் உயிர் நீத்ததை திமுக நினைவுகூர்ந்துள்ளது. 1967 ஜூலை 18 அன்று அண்ணாதுரை தலைமையிலான அரசு, சென்னை மாகாணத்தின் பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றும் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றியது. சங்கரலிங்கனாரின் உயிர்த் தியாகத்துக்கும், தமிழ் மக்களின் மொழி உணர்வுக்கும் அங்கீகாரம் கிடைத்த நாள் ஜூலை 18 என்பதால்தான், அந்நாள் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என 2021-ல் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது. வரலாற்றை அரசியலுக்காக மாற்ற வேண்டாம், தமிழகத்தின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம் என்றும் திமுக கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு சமூக வலைதளங்களில் எதிர்வினைகள் எழுந்துள்ளன. ‘ஒருவர் பிறந்த நாளில் பிறந்தநாள் கொண்டாடுவீர்களா, அல்லது பெயர் சூட்டிய நாளைப் பிறந்தநாளாகக் கொண்டாடுவீர்களா?’ என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், தமிழக எல்லையைக் காக்கப் போராடிய மறைந்த தலைவர் ம.பொ.சிவஞானம், 1956 அக்டோபர் 26 அன்று வெளியிட்ட ‘நவம்பர் 1-ல் தமிழரசு வாரம் கொண்டாடுவோம்’ என்ற அறிக்கையையும் பலர் பகிர்ந்து வருகின்றனர்.