பாரிஸ்: விலைவாசி உயர்வு, கல்வி மற்றும் மருத்துவ செலவுகள் அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிராக பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இளம் தலைமுறையினர் சனிக்கிழமை நடத்திய போராட்டங்கள் வன்முறையில் முடிந்தன.

பிரான்ஸ்: மூன்றாவது வாரத்தில் போராட்டம்

இந்தப் போராட்ட அலை முதலில் பிரான்ஸில் தொடங்கியது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, கல்வி மற்றும் மருத்துவ செலவுகளைக் கண்டித்து அங்குள்ள இளைஞர்களும் மாணவர்களும் வீதிகளில் இறங்கினர். நிலைமையைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசு பல வாக்குறுதிகளை அளித்தபோதும், மாணவர்களும் பொதுமக்களும் அவற்றை ஏற்க மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். அரசுக்கு எதிரான இப்போராட்டங்கள் தற்போது மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளன. வார இறுதியில் நடந்த போராட்டங்களில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். பாரிஸ், மார்சேய் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறின; போராட்டக்காரர்கள் போலீசார் மீது பெட்ரோல் குண்டுகள் மற்றும் பிற பொருட்களை வீசினர்.

ஜெர்மனி: கட்டாய ராணுவ சேவைக்கு எதிர்ப்பு

ஜெர்மனியில், கட்டாய ராணுவ சேவையை எதிர்த்தும், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பொதுச் சேவைகளில் கூடுதல் முதலீடு செய்யக் கோரியும் இளைஞர்கள் போராட்டங்களை ஏற்பாடு செய்தனர். பெர்லின், மியூனிக், பிராங்க்பர்ட் உள்ளிட்ட 34 நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்றனர். பிராங்க்பர்ட்டில் முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் கடைகளைச் சூறையாடினர்.

சுவிட்சர்லாந்து: சூரிச்சில் மோதல்

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில், சமூக ஊடகங்கள் மூலம் விடுக்கப்பட்ட அழைப்பைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் ஒன்றுகூடினர். லாங்ஸ்ட்ராஸ் பகுதியில் நடந்த போராட்டத்தின்போது போலீசாருடன் மோதல் வெடித்தது; போராட்டக்காரர்கள் போலீசார் மீது பட்டாசுகளை வீசினர். கூட்டத்தைக் கலைக்க போலீசார் முயன்றபோது, சாலையில் பல்வேறு பொருட்களைக் குவித்து தீ வைத்தனர். இதில் மின்சார இருசக்கர வாகனங்களும் கார்களும் தீப்பற்றி எரிந்தன. இதையடுத்து கண்ணீர் புகைக் குண்டுகள், ரப்பர் குண்டுகள் மற்றும் தண்ணீர் பீய்ச்சியடித்து போலீசார் கூட்டத்தைக் கலைத்தனர்.