மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷிகர் அகர்வாலும், அவரது மனைவியான ஐ.பி.எஸ். அதிகாரி பிரஷாகா மாத்துாரும் குடும்பத்தினருடன் சேர்ந்து 36 சொகுசு வீடுகளை வாங்கியதாக எழுந்த புகார் குறித்து, ராஜஸ்தான் ஊழல் தடுப்பு பிரிவு விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. இம்மாநிலத்தில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.
தனியார் நிறுவனத்துக்கு சலுகை குற்றச்சாட்டு
‘அனந்தா’ என்ற வணிகப் பெயரில் நட்சத்திர சொகுசு விடுதிகளை நடத்தி வரும் கோயல் பேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சுற்றியே இந்த விவகாரம் எழுந்துள்ளது. தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலராகப் பணியாற்றிய ஷிகர் அகர்வால், முன்னதாக உதய்பூர் கலெக்டராகவும், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகவும் இருந்தபோது இந்நிறுவனத்துக்குப் பல சலுகைகளை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 27 அன்று, கோயல் பேஷன்ஸ் நிறுவனத்துக்கு ராஜஸ்தான் நிதித்துறை சிறப்புச் சலுகைத் தொகுப்பை அனுமதித்தது. அதே நாளில், ஷிகர் அகர்வால் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் 20 சொகுசு வீடுகள் பதிவு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
உதய்பூர், ஆல்வாரில் சொத்துகள்
உதய்பூர் மற்றும் ஆல்வார் நகரங்களில் உள்ள அனந்தா ரிசார்ட்டுகளில் உள்ள இந்த வீடுகள், சந்தை மதிப்பை விட மிகக் குறைந்த விலையில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. உதய்பூரில் ஷிகர் அகர்வால் பெயரில் 10 வீடுகளும், கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அவரது மனைவி பிரஷாகா மாத்துார் பெயரில் 10 வீடுகளும் வாங்கப்பட்டுள்ளன. ஆல்வாரில் வாங்கப்பட்ட 16 வீடுகளில், தம்பதியர் பெயரில் தலா நான்கு வீடுகளும், மீதமுள்ளவை அவர்களது இரு மகன்கள் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வீடுகளைப் பதிவு செய்த கையோடு, அவற்றை கோயல் பேஷன்ஸ் நிறுவனத்துக்கே நீண்டகாலக் குத்தகைக்கு அக்குடும்பத்தினர் வழங்கியுள்ளனர். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 1.8 கோடி ரூபாய் குத்தகை வருமானம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
சொத்து விவரப் பட்டியலில் முரண்பாடு
கடந்த ஜனவரியில் ஷிகர் அகர்வால் தாக்கல் செய்த சொத்து விவரப் பட்டியலில் 14 சொத்துகள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தன. அவரது மனைவி பிரஷாகா மாத்துார் தனக்கு எந்தச் சொத்தும் இல்லை எனத் தெரிவித்திருந்தார். இந்த முரண்பாடு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் தடுப்பு பிரிவின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இருவரும் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.




