தலைமைச் செயலகம் உட்பட தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணிபுரிவோர், வாரத்தில் ஒரு நாள் பாரம்பரிய உடை அணிந்து வரும் வகையில் ‘மரபு ஆடை’ திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்தார். இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழ்நாடு நாள் விழா
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் ‘தமிழ்நாடு நாள்’ விழா கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், விஜயலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். எல்லைக் காவலர்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை, தமிழறிஞர்களின் நூல்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை, தமிழறிஞர்களுக்கு ‘தமிழ் செம்மல்’ விருதுகள் ஆகியவை வழங்கப்பட்டன.
ஜூலை 18-ஐ ஏற்கனவே தமிழ்நாடு தினமாகக் கொண்டாடி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ராஜ்மோகன், மாநிலம் உருவான நவம்பர் 1-ஐயும் கொண்டாட வேண்டும் என்ற பலரின் கனவு தற்போது நனவாகியுள்ளது என்றார். குழந்தைகளுக்கு ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் போன்ற பொம்மைகளுக்குப் பதிலாக, நம் பாரம்பரியத்தைப் பேசும் தஞ்சை தலையாட்டி பொம்மையைப் பரிசளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அந்தப் பொம்மையைப் போல, வாழ்க்கையில் யார் தள்ளிவிட்டாலும் தன்னம்பிக்கையுடன் மீண்டும் எழுந்து நிற்க வேண்டும் என்றார். பொம்மை, உணவு, உடை, மொழி என அனைத்திலும் தமிழர்களுக்குத் தனிப் பண்பாடு உண்டு என்றும் அவர் கூறினார்.
தலைமைச் செயலகத்தில் தமிழ்ச் சங்கம்
ஊழலற்ற நிர்வாகத்தில் முதல்வர் விஜய் உறுதியாக இருப்பதாகவும், அனைத்துத் துறை அமைச்சர்களும் லஞ்சத்தை வெறுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நெசவாளர்களின் உழைப்பில் உருவாகும் பருத்தி ஆடைகளுக்கும், நம் பாரம்பரியத்திற்கும் உரிய அங்கீகாரம் கிடைப்பதே மரபு ஆடைத் திட்டத்தின் நோக்கம் என்றார். உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையில் தலைமைச் செயலகத்தில் தமிழ்ச் சங்கம் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். ஏற்கனவே செயல்படும் அனைத்துத் தமிழ்ச் சங்கங்களும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டு, முதல்வரே அதன் தலைவராகச் செயல்படுவார். உலகத் தமிழ் மாநாட்டை மீண்டும் நடத்தும் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார். இளம் பேச்சாளர்களை உருவாக்க, ‘தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு’ என்ற பெயரில் பள்ளிகளில் பல்வேறு தமிழ்ப் போட்டிகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்காக ஒருவர் தனக்கு ரூ.5 கோடி தருவதாகப் பேரம் பேசியதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். இது பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணிக்கு மட்டுமே தெரியும் என்றும், அந்த வாய்ப்பைத் தான் நிராகரித்ததாகவும் கூறினார். அந்தப் பதவி, ஒரு ரூபாய் கூடப் பெறாமல் புஷ்பவனம் குப்புசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழ் வழிக் கல்வி, தனிக்கொடி கோரிக்கை
விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிகளில், குறிப்பாகத் தனியார் பள்ளிகளில், தமிழில் பேசுவதே தவறு என்ற மனநிலை நிலவுவதாகக் குற்றம் சாட்டினார். தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியை இந்த ஆட்சியிலேயே கட்டாயமாக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடம் அவர் கோரிக்கை விடுத்தார். ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இதை முதலில் பின்பற்ற வேண்டும் என்றார். மேலும், நவம்பர் 1 மற்றும் ஜூலை 18 ஆகிய நாட்களில் முதல்வர் கையால் தமிழகத்திற்கான தனிக்கொடியை வடிவமைத்து ஏற்ற வேண்டும் என்றும், அது ஒவ்வொரு வீட்டிலும் ஏற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.




