தமிழக ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக மஹாராஷ்டிராவிலிருந்து கொண்டு வரப்பட்ட 450 டன் வெங்காயம் எங்கே சென்றது என்பது தெளிவாகவில்லை. தமிழக அரசு அதிகாரிகளும் ரயில்வே அதிகாரிகளும் முரண்பட்ட தகவல்களை அளித்துள்ளதால் குழப்பம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் வெளிச்சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ₹70 முதல் ₹80 வரை விற்கப்படுகிறது. விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக கூட்டுறவுத் துறை, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (நாபெட்) மூலம் வெங்காயத்தைக் கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு கடைகளில் விற்பனை செய்து வருகிறது. இதுவரை மூன்று கட்டங்களாக விற்பனை நடந்துள்ளது.

நான்காம் கட்டத்துக்காக நாபெட் அனுப்பிய 450 டன் வெங்காயம் தரமற்றதாக இருந்ததால், தமிழக அரசு அதை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. அந்த வெங்காயம் சென்னை தண்டையார்பேட்டை சரக்கு ரயில் முனையத்தில் வீணாகி வருவதாகத் தகவல் வெளியானது. கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், கூட்டுறவு இணைப் பதிவாளர் தலைமையிலான குழு தரத்தை நேரில் ஆய்வு செய்ய மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் முகாமிட்டிருந்தது. ஆனால், அவர்களிடம் காட்டாமலேயே நாபெட் அமைப்பு வெங்காயத்தை சரக்கு ரயிலில் சென்னைக்கு அனுப்பிவிட்டது. கிலோ ₹29 விலையிலான இந்த வெங்காயம் கடந்த சனிக்கிழமை சென்னை வந்தடைந்தது; பரிசோதனையில் 25 சதவீதத்துக்கும் மேல் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதற்குப் பணம் செலுத்தப்படவில்லை, ஆர்டர் ரத்து செய்யப்பட்டது; வெங்காயத்தைத் திரும்பப் பெறுவது நாபெட்டின் பொறுப்பு என அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் ரயில்வே அதிகாரிகள் வேறு விதமாகக் கூறுகின்றனர். மஹாராஷ்டிராவிலிருந்து வந்த வெங்காயம் திருப்பி அனுப்பப்படவில்லை என்றும், தமிழக அரசு அதிகாரிகளே அதை எடுத்துச் சென்றுவிட்டனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர். திருப்பி அனுப்ப வேண்டுமெனில் ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும்; அத்தகைய அனுமதி எதுவும் கோரப்படவில்லை என்றும், முனையத்தில் தற்போது வெங்காயம் எதுவும் இல்லை என்றும் கூறினர்.

வெங்காயத்தைப் பெறவில்லை என கூட்டுறவுத் துறையும், மாநில அரசே எடுத்துச் சென்றது என ரயில்வேயும் கூறுவதால், 450 டன் வெங்காயம் எங்கே சென்றது என்பது புதிராகவே உள்ளது.