இந்தியாவைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோர்களான நமன் பன்சால் மற்றும் ஸ்ரேயன்ஸ் ஜெயின் ஆகியோர், 18 வயதிலேயே தங்களது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஸ்டார்ட் அப் நிறுவனமான மேனிக்யூல்-க்கு சுமார் ரூ.12 கோடி நிதி திரட்டி சாதனை படைத்துள்ளனர். இந்த நிறுவனம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.

சிறு வயதிலேயே தொழில்நுட்ப ஆர்வம்

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த நமன் பன்சால், 13 வயதிலேயே முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். டெவலப்பர், தொழில்நுட்ப உள்ளடக்கம், மென்பொருள் விநியோகம் ஆகிய துறைகளில் அனுபவம் பெற்ற அவர், ஐந்து ஆண்டுகள் தொழில்நுட்ப விற்பனைப் பிரிவிலும் பணியாற்றியுள்ளார்.

ஸ்ரேயன்ஸ் ஜெயின் 14 வயதில் புரோகிராமிங் எழுதத் தொடங்கினார். பல்கலைக்கழகத்துக்குச் செல்லாமல் நேரடியாகத் தொழில்நுட்பத் துறையில் தனது பணியைத் தொடங்கிய அவர், சூப்பர்மெமரி நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது நுகர்வோருக்குப் பெரிதும் பயனளிக்கும் வகையிலான செயலி ஒன்றையும் அவர் உருவாக்கினார்.

மேனிக்யூலின் நோக்கம்

இருவரும் இணைந்து மேனிக்யூல் நிறுவனத்தைத் தொடங்கி, அதன் இணை நிறுவனர்களாக உள்ளனர். ஏஐ தளங்கள் வாயிலாக மென்பொருள் நிறுவனங்கள் நுகர்வோரை அணுகும் விதத்தை மாற்றுவதும், அவற்றின் தயாரிப்புகளைப் பரிந்துரை செய்து பயனர்கள் பயன்படுத்தச் செய்வதுமே தங்கள் நோக்கம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல்கட்ட நிதி

தங்கள் நிறுவனத்துக்காக நிதி திரட்டும் முயற்சியில் இறங்கிய நமன் பன்சாலும் ஸ்ரேயன்ஸ் ஜெயினும், முதலீட்டு நிறுவனங்கள் வாயிலாக முதல்கட்டமாக ரூ.12.32 கோடியைத் திரட்டியுள்ளனர். இது இந்த இளம் நிறுவனர்களுக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க தொடக்க வெற்றியாகக் கருதப்படுகிறது.