குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. கேக்குடன் முதல்வர் விஜய் கையெழுத்திட்ட வாழ்த்து அட்டையும் வழங்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

நவம்பர் 14ல் கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்தில், இந்த ஆண்டு முதன்முறையாக மாணவர்களுக்கு கேக் வழங்கப்படுகிறது. இதற்காக அரசு ரூ.10.5 கோடி ஒதுக்கியுள்ளது. எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் 45 கிராம் எடையுள்ள கேக் நவம்பர் 13ல் வழங்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக இயக்குனர்கள் லதா, நரேஷ் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் (சி.இ.ஓ.), மாவட்டக் கல்வி அதிகாரிகளுடன் (டி.இ.ஓ.) நேற்று கூகுள் மீட்டிங் மூலம் ஆலோசனை நடத்தினர். கிரீம் இல்லாத கேக் வழங்கப்படும் என்றும், நான்கு வகை கேக்குகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ‘எமிஸ்’ தளத்தில் உள்ள மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, பள்ளி வாரியாக மாவட்ட விநியோக அலுவலகங்கள் (டி.எஸ்.ஓ.) மூலம் நவம்பர் 10ல் கேக் விநியோகம் செய்யப்படும்.

நவம்பர் 13 வரை கேக்குகளைப் பாதுகாப்பாக வைத்திருந்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இந்த கேக் 50 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும். முதல்வர் விஜய் கையெழுத்திட்ட வாழ்த்து அட்டையை கேக்குடன் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. எந்தப் புகாருக்கும் இடமின்றி திட்டத்தை நிறைவேற்ற கல்வி அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.