காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டி’ கூட்டணி டில்லியில் நடத்திய பேரணியில் எதிர்பார்த்த பலத்தைக் காட்ட முடியாததால், மாநிலக் கட்சிகளிடம் காங்கிரசின் செல்வாக்கு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களுக்கு முன்னதாக பலத்தை வெளிப்படுத்த காங்கிரஸ் விரும்பியிருந்தது.

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, கடந்த 1ம் தேதி டில்லி ராம்லீலா மைதானத்தில் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. 10 லட்சம் பேரைத் திரட்டுவதே இலக்கு என காங்கிரஸ் தலைவர்கள் அறிவித்திருந்தனர். ஆனால் சுமார் 50 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்றதாக டில்லி போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது; மத்திய உளவுத்துறையினர் ஒன்றரை லட்சம் பேர் எனக் கணக்கிட்டுள்ளனர்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உத்தரபிரதேசம், கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இத்தேர்தல்களில் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் விரும்பியது; அதற்கான பலத்தை இந்தப் பேரணி காட்டும் என்றும் எதிர்பார்த்தது. ஆனால் அது நிறைவேறாததால், மீண்டும் கூட்டணிக் கட்சிகளின் தயவை நாட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஒதுக்கும் தொகுதிகளையே காங்கிரஸ் பெற வேண்டியிருக்கலாம். பேரணியில் அகிலேஷ் பங்கேற்ற போதிலும், காங்கிரஸ் அழைப்புக்கு மக்களிடம் பெரிய ஆதரவு இல்லை என அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், இந்தப் பேரணி தேர்தல் கமிஷனுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல; காங்கிரஸ் தலைமையில் ‘இண்டி’ கூட்டணி ஒன்றிணைந்து செயல்படுவதை வெளிப்படுத்தும் நோக்கமும் கொண்டது என்றனர். ஆனால் பேரணி வெற்றி பெறவில்லை என்பதை ஒப்புக்கொண்ட அவர்கள், இதனால் வட மாநிலங்களில் மாநிலக் கட்சிகளின் ஆதரவைத் தக்கவைப்பதிலும், தொகுதி பங்கீட்டில் காங்கிரசின் விருப்பத்தை வலியுறுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறினர். தமிழகத்திலும் தவெகவுடன் தொகுதிப் பேரம் பேசாமல் கூட்டணியைப் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.