திறனற்ற நிர்வாகத்தால் தமிழகம் ஜி.எஸ்.டி. வரி வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளதாக, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் விஜய்தான் முதல்வர் என்பதால், அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்தித்து, அங்குள்ள பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஆனால், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளுக்கு மட்டுமே சென்று நலத்திட்ட உதவிகளை வழங்குவதாகவும், அவர் தேர்தலை மனதில் கொண்டே பிரசாரம் செய்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் கூறினார்.
வளர்ச்சி குறைந்த பல மாநிலங்களில் ஜி.எஸ்.டி. வசூல் அதிகரித்துள்ள நிலையில், வளர்ச்சி பெற்ற தமிழகத்தில் வரி வருவாய் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிப்பதாக பழனிசாமி குறிப்பிட்டார். நிர்வாகக் கோளாறும், திறனற்ற செயல்பாடுமே இதற்குக் காரணம் என்றார்.
தவெக ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். அரிசி விலை கிலோவுக்கு 25 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும், சர்க்கரை, பருப்பு, எண்ணெய், புளி உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் கூறினார். தீபாவளி நேரத்தில் மக்கள் அதிகமாக வாங்கும் ஆவின் இனிப்புகளின் விலையும் உயர்ந்துவிட்டது என்றார்.
விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், பல்வேறு காரணங்களைச் சொல்லி நேரத்தை வீணடிப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர் என்றும் பழனிசாமி குற்றம் சாட்டினார்.




