இந்தியாவில் 2026ம் ஆண்டில் தங்கத்தின் தேவை கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறையக்கூடும் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. விலை அதிகமாக இருப்பதால், நகைகளுக்கும் முதலீட்டுக்கும் தங்கம் வாங்குவது நாடு முழுவதும் குறைந்துள்ளது.
விலை உயர்வு, இறக்குமதி வரி அதிகரிப்பு, தங்கம் வாங்குவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோள் ஆகியவையும் தேவை குறைவுக்குக் காரணங்களாக அமைந்துள்ளதாக கவுன்சில் கூறியுள்ளது.
தீபாவளி மற்றும் திருமண சீசன் காரணமாக அக்டோபர்–டிசம்பர் காலாண்டில் தேவை ஓரளவு உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், விலை தொடர்ந்து உயர்ந்தால், எடை குறைந்த நகைகளை வாங்குவது அல்லது பழைய நகைகளைக் கொடுத்து புதியவை வாங்குவது போன்ற வழிகளை மக்கள் நாடலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கமாடிட்டி வர்த்தகர்கள் தங்கத்தை எவ்வாறு அணுக வேண்டும் என ‘காம்ட்ரென்ட்ஸ்’ நிறுவன இயக்குநர் ஞானசேகரனிடம் கேட்டபோது, தற்போது 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1,38,000லிருந்து சரிந்து ரூ.1,30,000 முதல் ரூ.1,25,000 வரை குறையக்கூடும் என்றார்.
டாலர் மதிப்பின் ஏற்ற இறக்கமும், ஏ.ஐ. சார்ந்த பங்குகளின் சரிவும் தங்கம் விலையில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், விலை இறங்குமுகத்தில் தொடரவே அதிக வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். அமெரிக்க செனட் தேர்தல் முடிவுகளைப் பொறுத்து விலையில் மாற்றம் ஏற்படலாம் என்பதால், அடுத்த நகர்வை முடிவு செய்ய அந்த முடிவுகளுக்காகக் காத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.




