தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவும், பிற நாடுகளுடனான பொருளாதார உறவை வலுப்படுத்தவும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அரசு முறைப் பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார். முனிச் நகரில் பல முன்னணி நிறுவன அதிகாரிகளைச் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பயணத்தின்போது குவாண்டம் சிஸ்டம்ஸ் நிறுவனத்துக்குச் சென்ற அவர், அதன் நிர்வாக இயக்குநர் அலெக்ஸான்டிரா டேமன்ஹெயினை சந்தித்தார். அவர் தமது குழந்தையைச் சுமந்தபடியே அலுவலகப் பணிகளைக் கவனித்து வந்தார். குழந்தையைப் பராமரித்துக்கொண்டே பணிகளையும் மேற்கொள்ளும் அவரது சவாலான முயற்சியை அமைச்சர் கீர்த்தனா பாராட்டினார்.
அப்போது, தமிழகத்திலும் இதுபோன்ற ஒருவர் இருப்பதை அவர் நினைவுகூர்ந்தார். தவெக எம்எல்ஏ பல்லவியும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு சட்டசபையிலும் அரசு நிகழ்ச்சிகளிலும் உரையாற்றுவார் என்று அவர் கூறினார். பின்னர், குழந்தையுடன் இருந்த பெண் தொழிலதிபருடன் அமைச்சர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.




