பிரதமர் நரேந்திர மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா என சவால் விடுத்து வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுலுக்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாகப் பதிலளித்துள்ளார்.

முன்னதாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் எஸ்.ஐ.ஆர். விவகாரம் குறித்து விவாதிக்க சிறப்பு பார்லிமென்ட் கூட்டத்தொடரைக் கூட்ட அரசு தயார் என்றும், ராகுல் நேரில் வந்து விவாதிக்கத் தயாரா என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியிருந்தார். இந்த சவாலைத் தவிர்த்த ராகுல், சமூக வலைதளத்தில் பிரதமருக்கு மீண்டும் சவால் விடுத்தார். பிரதமர் எந்த இடத்தையும் தேர்வு செய்யலாம், மோகன் பகவத்தைக்கூட நடுவராக வைத்துக் கொள்ளலாம், நாட்டு மக்கள் முன்னிலையில் விவாதிக்கத் தயார் என அவர் பதிவிட்டிருந்தார்.

இதற்கு சமூக வலைதளத்தில் பதிலளித்த நிர்மலா சீதாராமன், விவாதத்துக்கு இடத்தைத் தேர்வு செய்யுமாறு பிரதமரிடம் ராகுல் கேட்பதாகவும், அவர் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்திருக்கும் பார்லிமென்ட்டே அதற்கான இடம் என்றும் தெரிவித்தார். எஸ்.ஐ.ஆர். மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டத்தொடர் நடத்தத் தயார் என அமித் ஷா ஏற்கனவே கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

சமூக வலைதளங்களில் சவால் விடுவதில் காட்டும் ஆர்வத்தை பார்லிமென்ட்டில் காட்ட ராகுல் மறுப்பதாக அவர் குற்றம் சாட்டினார். அரசிடம் கேள்வி கேட்டுவிட்டு, அரசு பதிலளிக்கும்போது வெளிநடப்பு செய்வது அவரது வழக்கம் என்றும், மற்றவர்களின் பதிலைக் கேட்கும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் வேண்டும் என்றும் கூறினார். காங்கிரஸ் தலைவர் வீட்டில் நடத்தப்பட்ட போலி பார்லிமென்ட் கூட்டம் பார்லிமென்ட்டின் மாண்பையே கேலி செய்வதாக இருந்தது என்றும் அவர் விமர்சித்தார்.

எப்போதும் பயப்படாதீர்கள் என்று பேசும் ராகுல், உண்மையான ஆதாரங்களுடன் களத்துக்கு வந்து விவாதத்தை முழுமையாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.